விரதங்களில் மங்கலம் தரும் மகாசிவராத்திரி விரதம்

ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருட்ஜோதியான சிவபெருமானுக்குரிய பெரு விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று மகாசிவராத்திரி விழா உலகம் முழுவதும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
அம்பிகைக்கு உகந்தது நவராத்திரி விரதம். சிவனுக்கு பிடித்தது சிவராத்திரி விரதம். இரண்டுமே இரவோடு தொடர்புடைய விரத வழிபாட்டு நாளாகும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள். சிவன், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி. 
பிரம்மனும் நாராயணனும், சிவனது அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளும் இதுவே. தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது, அதில் இருந்து 
ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். 
சதுர்த்தசியன்று தேவர்கள் சிவனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி. ஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கியது. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. 
அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். 
அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக வாசம் கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கல வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. 
சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என 5 வகைப்படும். மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு சிவபூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று 
சிவனை தரிசனம் செய்ய வேண்டும். 
முடியாதவர்கள் சிவலாயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை அபிஷேகங்களை கண்டு களிக்கலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம். அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். நான்கு சாமப்பூஜைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடைபெறும்
 சிவபூஜையே தலை சிறந்தது. 
இது லிங்கோற்பவ காலம். விசுவ ரூப தரிசன நேரம். உருவமற்ற சிவன் உருவம் பெற்று லிங்கோற்பவ மூர்த்தியாக லிங்கத்திலே திருக்காட்சி தரும் புனிதமான நேரம் இதுவே. பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் முடி, அடிகளை காண முயலும் தோற்றம் அப்போது புலனாகிறது.
 சிவ தரிசனம் கிடைக்கிறது. 
மும்மூர்த்திகளும் அங்கே தரிசனம் தருவதால் அவர்களின் பேரருளும் பக்தர்களுக்கு கிடைக்கிறது. சிவராத்திரிதினத்தன்று முழு உபவாசத்தை கடைப்பிடிப்பதால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 
வீட்டில் பூஜை செய்வது எப்படி? 
மகாசிவராத்திரி பூஜையை வீட்டில் செய்ய விரும்புபவர்கள் அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபட வேண்டும். மாலையில் வீட்டில் ஒரு தூய்மையான இடத்தில் அல்லது பூஜை அறையில் சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். 
இரவு 4 காலமும் பூஜை செய்ய வேண்டும். இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்தில் ஆவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும். அதிகாலை 3 மணிக்கு வில்வ இலை மற்றும் மலர் களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாய நம நமச்சிவாய என மந்திரம் சொல்லலாம். 
சிவன் தொடர்பான பாடல்கள் கதைகளை கேட்கலாம். சினிமா, டி.வி. பார்க்க கூடாது. முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், 
காய்கறி ஆகியவற்றையும், வில்வ பழத்தையும், நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம், மாதுளை பழங்களையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும். 
நான்காம் ஜாமத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் கிடைக்கும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை முடிந்ததும் தன்னால் முடிந்த அளவு 
தானங்கள் செய்ய வேண்டும். 
விடிந்ததும் நீராடி, நித்ய கடன்களை முடித்து விட்டு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
சிவராத்திரி விரதமகிமை 
ஒரு சிவராத்திரியன்று வில்வ மரத்தடியில் சிவனும், பார்வதியும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அதை மரத்தில் இருந்த ஒரு குரங்கு தூங்காமல் கேட்டுக் கொண்டு இருந்தது. தூக்கம் வராத குரங்கு வில்வ இலைகளை பறித்து சிவன் மேலும், பார்வதி மேலும் வீசிய படியே இருந்தது. சிவராத்திரியில் 4 காலங்களிலும் தூங்காமல் குரங்கு வீசிய வில்வ இலைகளை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். 
அந்த குரங்கிற்கு மகா சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைத்தது. அடுத்த பிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார். உடனே அந்த குரங்கு தான் பெற்ற பாக்கியத்தை உலகம் அறியும் பொருட்டு முசுகுந்த மன்னனாக தான் வாழும் காலத்தில் குரங்கு முகத்துடன் பிறக்க வேண்டும் என வரம் கேட்டது. 
சிவனும் அப்படியே ஆகட்டும் என வரம் அளித்தார். அப்படியே சோழ மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தியாக குரங்கு முகத்துடன் பிறந்து மூவுலகிலும் ஆட்சி செய்தார். 
விரதம் இருந்து முக்தி பெற்ற வேடன் 
தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வில்வனேஸ்வரர் கோவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த ஆலயத்தில் தவநிதி என்ற முனிவர் தங்கி இருந்து வழிபட்டு வந்தார். அப்போது மான் ஒன்றை வேட்டையாட வேடன் ஒருவன் துரத்தி வந்தான். தப்பி ஓடிய மான் ஆலயத்திற்குள் புகுந்து தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது. 
முனிவர் அதற்கு அபயம் அளித்தார். இதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க தயாரானான். அடியாரின் துயரை நீக்க இறைவன் புலிவேடம் கொண்டு வேடனை துரத்தினான். உயிருக்கு பயந்த வேடன் அங்கிருந்த மரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டான். அவனை துரத்திய புலி மரத்தின் கீழே இருந்தது. 
வேடன் இரவு முழுவதும் மரத்தில் தங்கி இருந்தான். பசியும், பயத்தாலும் அவனுக்கு தூக்கம் வந்தது. கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மரத்தில் இருந்து ஒவ்வொரு இலைகளாக பிரித்து கீழே போட்டுக் கொண்டு இருந்தான். அன்று சிவராத்திரி ஆனதால் அவன் பறித்து போட்ட இலைகள் கீழே புலி வடிவில் இருந்த சிவபெருமான் மீது விழுந்து அர்ச்சனைகளாக விழுந்து கொண்டு இருந்தது. 
இதனால் தூக்கமின்றி சிவனை வழிபட்ட புண்ணியம் அவனுக்கு கிடைத்தது. இறைவன் வேடனுக்கு மோட்சம் அளித்து அருளினார். விடிந்தால் அவனது ஆயுள் முடியும் நிலை இருந்தது. பொழுது விடிந்ததும் அவனது உயிரை பறிக்க எமன் ஆலயத்திற்குள் நுழைந்தான். உடனே தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றிய இறைவன் கையில் கோலேந்தி எமனை விரட்டினார். எமனும் விடவில்லை. 
இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளான நந்தி தனது சுவாசத்தினால் எமனை உள்ளே நுழையாமல் தடுத்தார். இதைநினைவுப்படுத்தும் வகையில் நந்தி வாயிலை நோக்கியவாறும், தட்சிணாமூர்த்தி கையில் கோலேந்தியும் காட்சி தருகின்றனர். 
நன்மை தரும் ராத்திரி பூஜை  
சிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு ஒரு நாளும் அபாயம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சிவராத்திரி தினத்தில் இரவில் சிவபெருமானை வேண்டி 4 ஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12,30 மணி, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து காரியங்களிலும் நன்மை பயக்கும். 
முதல் காலத்தில் சிவனுக்கு பிரம்மா பூஜை செய்வதாக ஐதீகம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் பிறவியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம். மகாவிஷ்ணு 2–வது கால பூஜையை செய்கிறார். இந்தக்காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் தன, தானிய சம்பத்துகள் சேரும். 
மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம். இதை லிங்கோத்பவ காலம் என்பர். சிவபெருமானின் அடி, முடியை காண வேண்டி பிரம்மா அன்ன பறவை வடிவில் மேலேயும், மகா விஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் எந்த வித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும். 
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. அப்போது விரதம் இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். இல்லறம் இன்பமாக திகழும். நினைக்கின்ற காரியம் நிறைவேறும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.