முருகா வேல் கொண்டு பகைதுரத்திய
வீரத் தலைவ நீ முருகா!
ஈழத் தமிழர் பகை கண்டும்
பாராமுகம் காட்டுதல் முறையோ!
இலட்சோப இலட்சம் மக்கள்
உன் திருத்தலம் தேடி வந்து
வேலா… கந்தா…! முருகா… கலியுகவரதா
எனப் போற்றி துதி செய்தும்
வேல் கொண்டு எம் பகை தீர்க்காதது ஏனோ?
வேல் கொடுத்து வேந்தனாக
ஏறு அரசாட்சி என்று
வேண்டிய போதிலும் வீணர்கள் விட்டிலர்
வேல் எறிந்து சூரர் தமை அடக்கி
தமிழினம் தழைக்க எண்ணா
குறை போக்கு முருகா!
குபேர வாசலில் ராஜகோபுரம்
தமிழ்க் குடிக்கு இராஜயோகம்
என்று எண்ணி தொழுதிட
நீயோ! தமிழின விரோதத்திற்கு
இராஜயோகம் கொடுத்தது ஏனடா?
புது மாத்தளனில்… முள்ளிவாய்க்காலில்…
முட்கம்பி வேலிக்குள்…
சொல்லொணாத் துயர்பட்ட தமிழினம்
வென்றெழுந்த செய்தி தராத் தமிழ்த் தலைவா!
உன்னிடமும் ஏமாற்றும் உளம் உண்டோ!
மாங்கனி கிடையாக் கோபத்தில் மலையேறி
ஆர்ப்பாட்டம் புரிந்த நீதானே!
அகிம்சைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தா
மாங்கனிக்காக கோலம் களைந்து
கோவணம் உடுத்து பரமன் வீட்டையே
பாடாப்படுத்திய நீ!
உன் அடியார் தமிழர் துயர் படுகையில்
பேசாதிருப்பது முறையோ? முருகா!
ஓ! தமிழினத்தின் தலைமையே
தமிழருக்கு சூரர் என்றால்
யாம் வேல் எறிவது எங்ஙனம்
புத்திதான் இவ் உலகில் பெரிது
புரியத்தானே எந்தைக்கும்
பிரணவத்தை கற்றளித்தேன்
புரியாதா? ஈழத் தமிழா உனக்கு
உரிமை வேண்டும் என்று என்னிடம்
மன்றாடினால் எல்லாம் சரியாமோ!
உன் உரிமை வாக்கை
உணர்ந்தளிக்கத்தெரியாத உந்தனுக்கு
உரிமைக் கனி கிடைக்க
இன்னும் காலம் காத்திருக்கு என்று
நீ சொல்வது கேட்கிறது முருகா!
என் செய்வோம் பாவம் தமிழ் மக்கள்
உலகை நீ வலம் வந்து மாங்கனியைப் பெற
மயில் ஏறிச் சென்றாய் அல்லோ
நடந்தது என்ன? பெற்றனன் அண்ணன் மாங்கனி
தந்தையும் தாயும் செய்த சதி அது என்றாய் நீ!
என் செய்வோம் எங்களுக்கும் உன் கதிதான்.
நம்பி அளித்த வாக்குகளே! நம்மினத்தை
நடுத்தெருவில் நிறுத்தி விட்டு சிரிக்கிறது.
முருகா! சனல் 4 உன் நான்காவது சக்தி
மக்ரே உன் ஏகப்பிரதிநிதி
எம் மீது நீ கொண்ட கருணையால்
மக்ரேயின் சாட்சியம் மீண்டும் அரங்கேறி
நம் அவலம் உணர்த்துகிறது
முருகா… நல்லைவாழ் நாதா…
உன் கருணையால் தமிழர் அரசாள
உள்ளொன்றும் புறமொன்றும் கலந்த
சூரர் முகம் சிதைபட்டுப்போக
முருகா வேல் எடுத்து வீசு.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen