ஆடல்வல்லானின் ஆனித் திருமஞ்சனம்

!





நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனை திருக்கோயில்களுக்கு சென்று வழிபடுகிறோம். இளநீர், தேன், பால் போன்ற பொருட்களைக் கொண்டு உள்ளம் குளிர அபிஷேகம் செய்து மகிழ்ச்சி அடைகிறோம். நதியோ, அருவியோ, ஓடையோ அனைத்தும் இறுதியாகக் கடலில் கலப்பது போன்று அனைத்து உயிர்களும் பரமனை அணுகுவதே அபிஷேக வழிபாட்டின் தத்துவம் ஆகும். திருமால் "அலங்காரப் பிரியர்' என்றால் சிவபெருமான் "அபிஷேகப் பிரியர்' எனச் சிறப்பித்துக் கூறுவர். சிவபெருமானுக்கு என்னென்ன பொருட்களால் "அபிஷேகம்' செய்ய வேண்டும் என்பதை "அண்ணாமலைச் சதகம்' என்ற நூலில் காணப்படும் பாடல் ஒன்று எடுத்துக் கூறுகிறது.
  ""ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்''
  ""நெய்யினோடு பால் இளநீர் ஆடினான் காண்''
  ""நெய்யும் பாலும் தயிருங் கொண்டு நித்தல் பூசனை''
  - என்றெல்லாம் சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகங்களை திருமுறைப் பாடல்கள் போற்றிக் கூறுகின்றன.
  மேலும் சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்குரிய பொருட்கள் என்னென்ன என்பதையும், அதன் பலன்கள் என்ன என்பதையும் சிவாகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.
  ஆனந்த நடனம் புரியும் ஆடல்வல்லானின் வடிவம் தமிழகத்திற்கு தனிப் பெருமை அளிக்கிறது என்றால் மிகையில்லை. பல்லவர் கால கோயில்களிலும்,பாண்டியர் குடைவரைக் கோயில்களிலும் ஆடல்வல்லானாகிய நடராஜப் பெருமானின் அழகிய வடிவங்களைக் கண்டு வழிபடலாம். சோழ மன்னர்கள் காலத்தில் பல திருக்கோயில்களில் ஆடல்வல்லானை அழகிய செப்புத் திருமேனிகளாகச் செய்து அளித்து வழிபட்டனர். ஆடல்வல்லானை தம் குல நாயகனாகப் போற்றிச் சிறப்பித்தனர் என்பதை அறிகிறோம்.
  நடராஜப் பெருமான் நடனம் ஆடிய தலங்களாக சிதம்பரம் - கனகசபை,மதுரை-வெள்ளிசபை, திருநெல்வேலி- தாமிர சபை, திருக்குற்றாலம்-சித்திரசபை, திருவாலங்காடு-இரத்தினசபை ஆகியவை சிறப்பித்து வழிபடப் பெறுகின்றன.
  சிவபெருமானை பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும் நடராஜப் பெருமானின் வடிவம் சிறப்பானது.
  ""ஆனந்தம் ஆடரங்கு, ஆனந்தம் அகில சராசரம், ஆனந்தம் ஆனந்த கூத்து'' என இறைவன் ஆடிய தாண்டவத்தை திருமூலர் போற்றுகின்றார்.
  நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு "ஆறு நாட்கள்' சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் சிறப்பான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மார்கழி மாதத்தில் அதிகாலையிலும், மாசி மாதத்தில் காலையிலும், சித்திரையில் உச்சி காலத்திலும், ஆனி மாதத்தில் மாலையிலும், ஆவணியில் இரண்டாம் காலமும், புரட்டாசி மாதத்தில் அர்த்த யாமத்திலும் சிறப்பான அபிஷேகங்கள் நடைபெறுவதைக் காணலாம்.
 கூத்தப் பெருமானுக்கு நடைபெறும் ஆறு அபிஷேக நாட்கள் பற்றி ஒரு வெண்பா குறிப்பிடுகிறது.
  ""சித்திரையில் ஓணம் முதல்; சீர் ஆனி உத்தரமாம்
  சத்ததனு ஆதிரையும் சார்வாகும் - பத்தி வளர்
  மாசி அரி கன்னி மருவு சதுர்த்தசி மன்
  றீசர் அபிடேக தினமாம்''.
  சித்திரை-திருவோணம், ஆனி - உத்திரம், மார்கழி - திருவாதிரை, மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் சதுர்த்தசி நாளில் நடைபெறும் அபிஷேகங்கள் சிறப்பானவை ஆகும்.
  உலகில் காணப்படும் அனைத்தும் "கானல் நீர்' என்று தெளியும் தத்துவ ஞானமே திருமஞ்சனம் என்பதை காசி காண்டம் செய்யுள் கூறுகிறது. நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் "ஆனித் திருமஞ்சனம்' மிகவும் சிறப்பானது. இந்நாளில் சிவாலயங்களுக்கு சென்று "ஆனித் திருமஞ்சனம்' கண்டு வழிபட்டு வாழ்வில் அனைத்து நலன்களையும் அடைவோம்.



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.