பதின்மூன்றாம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராய்க் கொண்டு ஆட்சி செய்த மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன். இவன் தனது ஏழாவது ஆட்சியாண்டில், அதாவது கி.பி. 1223-ல் பாண்டிய நாட்டின் பெருமையினை உலகுக்குப் பறைசாற்றும் வண்ணம் தொடுத்த படையெடுப்புகளும், செய்துமுடித்த கோவில் திருப்பணிகளும் எண்ணிலடங்காது. ஏட்டிலுமடங்காது தொன்மை புகழ்மிக்க, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருப்பரங்குன்றம். மிகப் பெரிய மலைக்குன்றாய் விண்ணளாவ உயர்ந்தெழுந்து நிற்பது. இம்மலையினை கிரிவலம் வருவோர், தெற்கு கிரி வீதியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில், சங்க காலக் குடைவரை கோவிலை கண்ணாரக் கண்டு களிக்கலாம்.
எந்தவிதமான விஞ்ஞான, தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத கி.பி.எட்டாம் நூற்றாண்டு கால கட்டத்திலேயே, அடர்ந்த சோலைகள் சூழ்ந்த, குளிர்ச்சி பொருந்திய இடத்தில், சிற்பக் கலைக்கு சிறந்த சான்றாக எடுத்துச் சொல்லும் விதத்தில், ஒரு குடைவரைக் கோவிலை அமைத்துள்ளனர் நம் முன்னோர்.
மலைக்குன்றின் இக்கோவிலை தரிசிக்க, சிலபடிகள் மேலேறிச் சென்று, பிரம்மாண்ட வாசலை அடையலாம். அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் கம்பீர, புராதன மலை. குடைவரைக் கோவில் வாசல் முகப்பின் இடப்பக்கம் சிதைந்த நிலையில் காணப்படும் விநாயகர் உருவச்சிலை. அதனை அடுத்து இருப்பது, தியான நிலையில், அமர்ந்த கோலத்தில் காணப்படும் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் குடைவரைக் கோவிலின் வலப்பக்கம் புடைப்புச் சிற்பங்கள் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் சமணம் வேரூன்றி இருந்தது. அதனால்தான் சமண தீர்த்தங்கரர்களது சிற்பங்கள் மதுரை வட்டத்தில் திருவாதவூர், யானைமலை, மீனாட்சிபுரம், கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கின்றன.
இதனைக் கண்டு களித்த பின் குடைவரைக் கோவிலுக்குள் செல்லலாம். கலை நயம் மிக்க மூன்று பெரிய தூண்கள் வாசல் போன்று பிரம்மாண்டமாய் நின்று வரவேற்பது மாதிரி அமைந்துள்ளன.
அதனைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், இடப்புறம் அமைந்துள்ள தனிச் சந்நதியில் அழகான கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.
தெற்கு திசையைப் பார்த்த வண்ணம், மூலவரான தில்லைக் கூத்தனின் திருவுருவச் சிலை பாதி சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. இக்கோவில் அமைந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு. கல்வெட்டுச் செய்திகளின்படி, இது உமையாண்டான் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
நடராஜனின் உருவச் சிலைக்கு மேலே விநாயகர், சுப்பிரமணியர் சிற்பங்கள் எழிலுற விளங்குகின்றன. இடப்பக்கமாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரின் புடைப்புச் சிற்பம் விளங்குகிறது
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen